ஜெய் பீம்

 தமிழ்நாட்டின் பார்வை அனைத்து தளங்களிலும் சமூக நீதியை முன்னிலைப்படுத்தியே அமைந்திருக்கும். எனினும் இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் இட ஒதுக்கீடு, சுயமரியாதை, அதிகார வரம்பு போன்றவற்றைக் குறித்துத் தெளிவற்ற புரிதல் நிலவுகிறது. இந்த நிலையில் 1993 ஆம் காலக்கட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் ஜெய் பீம் படம் , ஓர் ஆக்கப்பூர்வமான படைப்பு. 


இருளர் சமுதாய மக்களின் வாழ்வியலையும், வலிகளையும், உழைப்பை மட்டும் சுரண்டிக்கொண்டு அவர்களை ஒதுக்கும் ஆதிக்கசாதிகளையும் தோலுரித்து காட்டிருக்கிறார்கள். சாதி, மதம், பணம் போன்றவற்றில் சிக்குண்டு கிடக்கும் அரசு இயந்திரம், காவல்துறையினரால் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை, அதிகார அத்துமீறல்கள், இதனால் வதைக்கப்படும் விளிம்பு நிலை மக்களின் துயரங்கள் எனப் படம் நெடுகிலும் பல கள உண்மைகளை உணர்த்துகிறார்கள். அவை மனதை ஒரே நேரத்தில் கனக்கவும் கோபத்தில் கனன்றவும் வைக்கிறது. இந்த பழுதடைந்த சமூகத்தில்,   அதிகாரங்களை எதிர்க்கும் ஒரு வீர மங்கை செங்கேணி,  ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி,  ஒரு மனிதநேயமிக்க வழக்கறிஞர், ஒரு சிறிய அளவிலான பொதுவுடைமையைப் போற்றும் கம்யூனிஸ்ட் தோழர்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பதை உணரலாம். ஆனால் அந்த ஒற்றை இலக்கங்கள் பன்மடங்காகப் பெருகினால் இந்த உலகம் அனைவருக்குமானதாக மாறும். 

வணிக சினிமா நடைக்கு தங்களை ஆட்படுத்தாமல் சிறந்த படைப்பை அளித்தமைக்கும்,  இருளர் மக்களின் வலிகளையும் தோழர் சந்துரு போன்ற போராளிகளை அறிமுகப்படுத்தியதற்கும் படக்குழுவினருக்கு நன்றியும் வாழ்த்துகளும். 

இத்தகைய சமூக போராளிகளையும் பெரியார், அம்பேத்கர் மொழிகளையும் பயின்று மனிதம் போற்றும் மானுடர்களாக செயல்படுவோம்.

Comments

Popular posts from this blog

Saints of Strangers!

Women Classified!

Not So Incredible India